Tuesday, November 26, 2013

நீதி சமூகம் படைப்போம் ...

நீதி சமூகம் படைப்போம் ...
 (வழக்குரைஞர்கள் தினம், கோட்டார் சவேரியார் பெருவிழா 27.11.2013) 

வாசகம்:

ஆமோஸ் 5:14-15, 21-24-
வேதாகமம் அறிமுகப்படுத்தும் கடவுள் நீதியின் கடவுள்... ஆபேலுக்காக காயேனைத் தட்டிக்கேட்கும் கடவுள், எகிப்தியர்களின் சுரண்டலில் தவிக்கும் மக்களை விடுவிக்க வந்த கடவுள், கடன்களை பொறுக்கும், நிலங்களை ஏழை எளியோருக்கு திருப்பி கொடுக்க தூண்டும் கடவுள், தனது நூறு ஆடுகளை தவிர்த்து பிறனது ஒரே ஆட்டை விருந்துக்காக கொன்றதை தட்டிக்கேட்கும் கடவுள்... நீதி தவிர, அல்லது அதற்கு ஈடாக மற்றெதையும், பலிகூட ஏற்காத இறைவனை, இறை வாக்கினர் ஆமோஸ் படம் பிடித்து காட்டுவதை கேட்போம்...

கலாத்தியர் 5:22-24
ஆவியின் கனி, குறிப்பாக அன்பு உள்ள இடத்தில் சட்டத்திற்கு இடமில்லை... சட்டம் வெளியிலிருந்து வருவது, யாரேனும் கட்டளை இடுவது. அன்பு உள்ளத்திலிருந்து வருவது, உணர்ச்சியாக தானாக, இயற்கையாக வருவது. ஆக, சட்டம் கிறிஸ்துவால் மாற்றப்பட்டு அன்பினால், ஆவியால் நிறைவு செய்யப்பட்டது. கலாத்தியருக்கு  பவுல் இவ்வுண்மையை விளக்குவதை கேட்போம்...

விசுவாசிகளின் மன்றாட்டு:
1. ஞான மேய்ப்பர்கள், திருப்பணியாளர்கள் மற்றும் துறவியர்: மேய்ப்பனின் ஒரே தகுதி இயேசுவை அன்பு செய்வதே... இயேசுவோ 'மிக சிறியோராகிய என் சகோதரர் சகோதரிகளுள் ஒருவருக்கு செய்ததை தனக்கே செய்ததாகவும், செய்யாததை தனக்கு செஇய்யாததாகவும் சொல்லியிருக்கின்றார். மேலும் பணி  ஏற்கவன்று  பணியாற்றவே வந்த அவரை பின்பற்றி இறையரசு கனவை நனவாக்க இவர்களை தூண்டவேண்டுமென்று இறைவா உம்மை மன்றாடுகிறோம்...

2. ஆட்சி பொறுப்பாளர்கள், அரசியல் தலைவர்கள்...: உமது பிள்ளைகள் எங்களுக்காக முடிவெடுக்கவும், சட்டங்கள் இயற்றவும் இன்னபிற எமது எதிர்காலத்தை நிர்ணயிக்கும் இவர்கள் பிறர் நலம், பொது நலம் பேணி மனித மாண்புடன் நீதி, நேர்மை நிலை நாட்டி எங்களை நடத்தி செல்லும் அருள் இவர்களுக்கு தரவேண்டுமென்று இறைவா...

3. இல்லறத்தவர்: மானிடம் தொடர்வது, இறைமக்கள் பிறப்பது, வளர்வதெல்லாம் இல்லறமெனும் நல்லறத்தால்தான். நமது தலைமுறை எவ்வளவோ இன்னல்களுக்கு ஆளாகி நிற்கின்றது. காரணம், தவறாக வளர்க்கப்பட்ட தலைமுறையே. 'இயேசுவைப்போல இன்னொரு பிள்ளையை பெற்றெடுத்து 'ஞானத்திலும் உடல்வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராக்க' பெற்றோரை ஆசிர்வதிக்க வேண்டுமென்று ....

4. நோயாளிகள், முதியோர், தனிமையில் வாடுவோர்...: நோய்வாய்ப்பட்டோரை பரிவுடனும், பாசத்துடனும் நடத்திய இயேசுவே, மருத்துவ புரட்சியின் நடுவிலும் நோயின் வேதனை தாங்கும் மக்களை, முதுமையின், தனிமையின் துயரங்களை அனுபவிக்கும் மக்களை கருணைக்கண் நோக்கியருளும், ஆரோக்கியமும் ஆறுதலும் அளித்தருள வேண்டுமென்று ...

5. சிறுவர்கள், இளைஞர்கள்: நாளையின் நம்பிக்கை நட்சத்திரங்கள் இவர்கள். 'ஒளி படைத்த கண்களோடு, உறுதிகொண்ட நெஞ்சோடு, வலிமைகொண்ட தோளோடு கருத்தில் தெளிவும் உறவில் கனிவும் கொண்டவர்களாக இவர்களை மாற்றவேண்டுமென்று ...

6. தொழிலாளிகள்: படைப்பு நிறைவு பெறுவது உழைப்பினால்,தொழிலினால்... இன்றைய முன்னேற்றம், வசதி அனைத்தும் உழைப்பின் பயனே, உழைப்பாளிகளின் படைப்பே. அவர்களுக்கு போதிய ஊதியமும், ஓய்வும், மற்று தேவையான அனைத்தும் தந்து உலகத்தை உயர்ந்ததோர் இடமாகக, இறையரசாக்க தேவையான அருளை வழங்கவேண்டுமென்று ...

- பங்கிராஸ் அருளப்பன் (வழக்குரைஞர், திருவனந்தபுரம் மாவட்ட நீதிமன்றங்கள் )